அரசு ஊழியர்களாக அறிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர், கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர், கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத்துணைத் தலைவர் வெண்ணிலா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

மாவட்டச் செயலாளர் கே.எல்லம்மாள், சிஐடியு திருப்பூர் மாவட்டப் பொருளாளர் டி.குமார், மாதர் சங்க மாநகரச் செயலாளர் சி.பானுமதி, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அகமது ஆகியோர் பேசினர். அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் அங்கன்வாடி ஊழியர் குடும்பத்தினருக்கு முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். மாநிலத் துணைத்தலைவர் எம்.பாக்கியம் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.மாவட்டம் முழுவதிலும் இருந்து அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

கோவை

கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் சாந்தி தலைமை வகித்தார்.

அவிநாசி சாலை தண்டுமாரியம்மன் கோயில் முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர்.ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையம் சாலையில் அமர்ந்து சில மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன்மாவட்டநிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்