கூலியம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையை சீரமைத்து, தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் என மொத்தம் 11 இடங்களில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலிக்காட்சி மூலம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார், அந்தந்த வட்டார அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
நெல்லுக்கு சல்பேட் பற்றாக்குறை உள்ளது தொடர்பாக ஏற்கெனவே மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கூலியம் கிராமத்தில் உள்ள ஏரியின் மூலமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பராமரிப்பு இல்லாமல் 2005-ம் ஆண்டு ஏரியின் கரைகள் உடைந்ததால் தண்ணீர் வீணாக வெளியேறியது. இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்நிலையில் கூலியம் ஏரிக்கரையை சீரமைத்து, தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாணிஒட்டு திட்டத்தின் நிலை குறித்து அறிவிக்க வேண்டும். யானைகளால் விளைநிலங்கள் சேதம் அடைந்தது குறித்து விவரங்கள் அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இதற்கு பதிலளித்து ஆட்சியர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 882.1 மிமீ மழையளவு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை 1,18,073 ஹெக்டேர் பரப்பளவில் உணவு தானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் நடப்பாண்டில் நெல் 20,248 ஹெக்டேர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 45,031 ஹெக்டேர் பரப்பளவிலும், பயறுவகைகள் 52,794 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. எண்ணெய் வித்து பயிர்கள் 16,444 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 7,275 ஹெக்டேர் பரப்பளவில் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 60.28 மெட்ரிக் டன், ராகி 40.98 மெட்ரிக் டன், தட்டை பயறு 1.46 மெட்ரிக் டன், கொள்ளு 8.20 மெட்ரிக் டன், நிலக்கடலை 40.23 மெட்ரிக் டன் விதைகள் இருப்பில் உள்ளன. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் நுண்ணீர் பாசனம் அமைத்து குறைந்த நீரில் அதிக மகசூல் செய்து பயனடைய வேண்டும்.
விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள பயிர்களில் ஏதேனும் நோய் தாக்குதல் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய பயிர் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பயனடைய வேண்டும். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், இணை இயக்குநர்கள் ராஜேந்திரன் (வேளாண்மைத் துறை), உமாராணி (தோட்டக்கலைத் துறை) ஆகியோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago