இரட்டை கொலை வழக்கில் தொழிலதிபர் கைது

By செய்திப்பிரிவு

உத்தனப்பள்ளி அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்தபாபுவின் மனைவி நீலிமா. கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி, நீலிமா காரில் உத்தனப்பள்ளி அடுத்த சானமாவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். காரை ஓட்டுநர் முரளி ஓட்டிச் சென்றார். அப்போது எதிரே லாரியில் வந்த கூலிப்படையினர், கார் மீது மோதி பெட்ரோல் குண்டுகளை வீசினர். இச்சம்பவத்தில் ஓட்டுநர் முரளி நிகழ்விடத்திலும், நீலிமா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

இரட்டை கொலை குறித்து உத்தனப்பள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், தொழில்போட்டி காரணமாக நீலிமாவின் உறவினரான ஓசூரை சேர்ந்த தொழிலதிபர் ஜெஆர் (எ) ஜெ.ராமமூர்த்தி என்பவர் கூலிப்படை உதவியுடன் இரட்டைக் கொலை செய்தது தெரிந்தது. இக்கொலை வழக்கில் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் 13 பேரை கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த ராமமூர்த்தி சென்னை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இதனை எதிர்த்து, உத்தனப்பள்ளி போலீஸார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள், ராமமூர்த்திக்கு வழங்கிய முன்ஜாமீனை நேற்று முன்தினம் ரத்து செய்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் ராமமூர்த்தி கைது செய்யப்பட்டார். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியதால் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேரில் சென்ற நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். இதனால் நேற்று காலை ஓசூர் அரசு மருத்துவமனையில் ராமமூர்த்திக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்து நேற்றிரவு சேலம் மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்