மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், அண்மையில் பெய்த மழையால் சாகுபடி பாதித்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலிக் காட்சி மூலம், ஆட்சியர் ப.வெங்கடபிரியா தலை மையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, ‘‘அண்மையில் தொடர்ச்சியாக பெய்த கன மழையால் மக்காச்சோளம், பருத்தி, நெல் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு குறித்து உரிய அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் பெற்றுத் தர வேண்டும். அரசலூர் ஏரிக்கரை உடைந்து வெள்ளம் வயல்களில் புகுந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுப்பணித் துறை அதிகாரிகளே காரணம்.

உரிய நேரத்தில் ஏரிக்கரையை செப்பனிடாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி நீர் புகுந்து சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்ட ஏரி, குளங்களில் உள்ள வரத்து வாய்க்கால்களை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் சர்க்கரை ஆலை மூலமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய அடுத்த தவணை நிலுவைத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினர்.

பின்னர், ஆட்சியர் பேசியது: பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டு 88,318 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது. ஏரிக்கரை உடைந்து அரசலூரில் வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுப்பு செய்து வருவாய் பேரிடர் மேலாளர் மூலம் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேரில் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், வேளாண் இணை இயக்குநர் ச.கருணாநிதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் த.செல்வக்குமரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பாத்திமா, வேளாண் துறை துணை இயக்குநர் ஏ.கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்