முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரையும் ஆளுநர் விடுதலை செய்யும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள கரன் என்ற முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகனின் மனைவி நளினி, வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் சென்னை புழல் சிறையிலும், ரவிச்சந்திரன் என்பவர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 7 பேரின் விடுதலை குறித்த அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகன் மற்றும் பெண்கள் தனிச்சிறையில் உள்ள முருகனின் மனைவி நளினி ஆகியோரை வழக்கறிஞர் புகழேந்தி நேற்று மாலை சந்தித்துப் பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘7 பேரின் விடுதலை தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களுக்குள் முடிவெடுப்பார் என சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுத்து விடுதலை செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. சிறையில் உள்ள நளினி மற்றும் முருகனை நேர்காணல் மூலம் பார்த்த போது, ஆளுநர் கண்டிப்பாக தங்கள் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிடுவார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள். 7 பேர் விடுதலை தொடர்பான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதால் அடுத்த கட்ட முடிவை பற்றி நாங்கள் சித்திக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago