நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உதகை நகராட்சி எல்லைக்குள் சுற்றுலாப் பயணிகள் சவாரி மேற்கொள்ளப் பயன்படுத்தப்படும் அனைத்து குதிரைகளையும் பிப்ரவரி 10-ம் தேதிக்குள் உதகை கால்நடை மருத்துவமனை வளாகத்துக்கு கொண்டு சென்று பதிவு செய்து, மைக்ரோ சிப்பிங் செய்து குதிரைகளுக்கு தகுதிச் சான்று பெற வேண்டும். தகுதிச் சான்று பெறாத குதிரைகள் சுற்றித் திரியவோ அல்லது சுற்றுலாப் பயணிகள் சாலைகளில் குதிரை சவாரி செய்யவோ கூடாது.
மைக்ரோ சிப்பிங் செய்யப்பட்ட குதிரைகளுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சித் துறையின் மூலமாக உதகை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக உரிமம் வழங்கப்படும்.
குதிரை பதிவு செய்யும் கட்டணமாக ஒரு குதிரைக்குரூ.250 மட்டும் வசூலிக்கப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறையின் மூலமாக வழங்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே சவாரிகள் செய்யப்பட வேண்டும். குதிரை சவாரிக்காக மார்வாரி, கத்தியவாடி, இளம் குதிரைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
பந்தயக் குதிரைகளை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் அந்த குதிரைகள்உடனடியாக பறிமுதல் செய்யப்படும். சாலைகளில் சுற்றித் திரியும் குதிரைகளுக்கு முதல் முறையாக ரூ.1,000 அபராதமும், இரண்டாம் முறையாக ரூ. 2000, மூன்றாவது முறை எனில் நீலகிரி மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தின் மூலம் குதிரைகள் பறிமுதல் செய்யப்படும்.
பதிவு செய்யப்படாத குதிரைகள் மூலமாக சுற்றுலாப் பயணிகளுக்கு குதிரை சவாரி செய்தால் முதல் முறையாக ரூ. 1,000 அபராதமும், இரண்டாம் முறையாக ரூ. 2,000,மூன்றாவது முறை எனில் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குதிரையின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago