திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசுவாமி மலைக் கோயிலில், தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு மகா அபிஷேகமும், 6 மணிக்கு ரதத்துக்கு எழுந்தருளல் நிகழ்வும் நடைபெற்றன. 7 மணிக்கு பக்தர்களால் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, தெற்கு ரத வீதியைக் கடந்து, கிரிவலப் பாதையில் மதியம் 12 மணியளவில் நிலை நிறுத்தப்பட்டது. மாலை 3 மணிக்கு திருத்தேர் இழுக்கப்பட்டு, மாலை 6 மணியளவில் திருத்தேர் நிலை அடைகிறது. சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கரோனா பெருந்தொற்று காலம் என்பதால், இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின்அறிவுறுத்தல்படி ஒருநாள் மட்டுமே நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றகருணாம்பிகையம்மன் உடனமர்அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, நேற்று அதிகாலை வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பிரகார உலா வந்து தேருக்கு எழுந்தருளினர். கரோனா பொதுமுடக்கத்தால், முக்கிய நிகழ்வாக மழலையர் தேர் எனப்படும் சுப்பிரமணியர் தேரை இழுக்க குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பெரியவர்கள் மட்டும் ‘அரோகரா’ முழக்கம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.
ஊத்துக்குளி அருகே கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமிகோயிலில் நேற்று காலை மகா அபிஷேகம், சாமி புறப்பாடு, தேர் வடம்பிடித்தல் நடைபெற்றது. கரோனா காலம் என்பதால், இடை நிறுத்தாமல் 4 ரத வீதிகள் வழியாக தேர் இழுக்கப்பட்டு, கிழக்கு ரத வீதியில் நிலைநிறுத்தப்பட்டது.
இதேபோல, திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில், அலகுமலை முருகன் கோயில், நாச்சிபாளையம் வெள்ளிமலை, கொங்கணகிரி மலை உட்பட பல்வேறு தலங்களிலும் தைப்பூச விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
உதகை
நீலகிரி மாவட்டம் உதகை எல்க்ஹில் மலையில் 90 ஆண்டுகள்பழமையான பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இருந்துபுறப்பட்ட தேர் ஹெச்.எம்.டி. வரை சென்று, மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இக்கோயிலில் இன்று (ஜன. 29) மறுஅபிஷேகமும், நாளை விடையாற்றி உற்சவம்,சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. இதேபோல, அப்புகோடு ஆனந்தமலை முருகன் கோயில், மஞ்சூர் அருகே அன்னமலை முருகன் கோயில், கோத்தகிரிசக்திமலை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் தைப்பூச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago