காஞ்சி, செங்கை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தைப்பூசத்தை ஒட்டி முருகன் கோயில்களில் பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மூலவருக்கு தைப்பூச விழாவை ஒட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமியை தரிசனம் செய்வதற்காக அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கண்ணகப்பட்டு பகுதியில் உள்ள வேம்படி விநாயகர் கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து, அலகு குத்தி ஊர்வலமாக வந்து கந்தசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். பலர் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குன்றத்தூரில் தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமானால் பாடல் பெற்ற தலமான முருகன் கோயிலில் தைப்பூச நாளில் மூலவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து, வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.
கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படுவதைக் தடுக்கும் வகையில் குன்றத்தூர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இளையனார் வேலூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருத்தணி கோயில்
திருத்தணியில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் சுப்ரமணிய சுவாமி கோயிலில், தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தங்கக்கவசம், வைர கீரிடம், பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை முதல்,இரவு வரை, தமிழக பகுதி மட்டுமில்லாமல், ஆந்திர மாநில பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால் காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட காவடிகளை சுமந்து வந்து, வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.மாலையில் உற்சவர் மயில் வாகனத்தில் கோயில் மாடவீதியில் உலா சென்று, பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன்கோயில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago