கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை(29-ம் தேதி) காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
10 வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் நடக்கும் இந்த குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள், கரோனா தொற்று பரவாமல் இருக்க, தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் சமூக இடைவெளியுடன் நடத்தப்படுகிறது. அதன்படி கிருஷ்ணகிரியிலும் நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராம கவுண்டர் கூறும்போது, ‘‘கடந்த ஒரு மாதமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்து ஒற்றை இலக்கத்தில் மட்டுமே பாதிப்பு உள்ளது. தற்போது ஆயிரம் பேர் வரை பங்கேற்கும் பொதுக்கூட்டங்களை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மாவட்டத்தில் பல்வேறு அரசு ஆலோசனைக் கூட்டங்கள், திருவிழாக்கள், பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன.
ஆனால் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மட்டும் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்படுகிறது. காணொலிக்காட்சி மூலம் நடத்தப்படும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளின் பல கேள்விகளுக்கு பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உரிய பதில் அளிப்பதில்லை. எங்களது கோரிக்கைகளுக்கு முக்கியத் துவம் அளிப்பதில்லை. எனவே ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தை நடத்த வேண்டும்,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago