டிராக்டர் பேரணி நடத்தியவர்கள் மீதானவழக்குகளை திரும்பப் பெற வேண்டும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என திருவாரூரில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் நேற்று நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக, திருவாரூர் வருவாய் கோட்ட விவசாயிகளுக்கு முற் பகல் 11 மணிக்கும், மன்னார்குடி வருவாய் கோட்ட விவசாயிகளுக்கு பகல் 12 மணிக்கும் என 2 பகுதிகளாக கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் ஜி.சேதுராமன் பேசியபோது, “விவசாயிகளின் நலன்களை காக்க வேண்டியே குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.

தற்போது, டிராக்டர் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் மீதான வழக்கு பதிவு கண்டிக்கத்தக்கது” என்றார்.

இதையடுத்து, விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

குடவாசல் யு.கார்த்திகேயன்: புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையில், வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனுக்கு பிடித்தம் செய்துவிட்டு, மீதித் தொகை மட்டுமே வரவு வைக்கப்படுகிறது. இதுபோன்ற நடைமுறையை கைவிட வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

விவசாயி கணேசன்: ஒரு நெல் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் கொடுத்தால்தான், மூட்டையை எடைக்கு வைப்போம் என கொள்முதல் ஊழியர்கள் நெருக்கடி தருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரடாச்சேரி ராமமூர்த்தி: நேரடி கொள்முதல் நிலையங்களில், வெளிமாவட்ட நெல்லுக்கு முக்கியத்துவம் தரும் நிலை உள்ளது.

இதைத் தவிர்த்து, உள்ளூர் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

பேரளம் வி. பாலகுமாரன்: ஒரே விவசாயியின் நெல்லை பலமுறை கொள்முதல் செய்வதைத் தடுக்க வேண்டும்.

திருவாரூர் பழனிவேல்: தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளதால், கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடும் முன்பாகவே தூர் வாரும் பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும்.

கோட்டூர் கலைவாணி: கடலை, உளுந்து ஆகிய பயிர்களுக்கும் பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும். நெல் கொள்முதல் தேக்கத்தைத் தவிர்க்க நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை இயக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

பின்னர் பேசிய ஆட்சியர் வே.சாந்தா, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்