டெல்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் டிராக்டர் பேரணி அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், இருசக்கர வாகனப் பேரணி மற்றும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதையடுத்து, திருப்பூர் மாநகரில் ஊத்துக்குளி சாலை பாளையக்காடு, தாராபுரம் சாலை கோவில்வழி, அவிநாசி சாலை காந்திநகர் ஆகிய 3 பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனப் பேரணிகள் தொடங்கின. மாநகராட்சி அருகே காந்தி சிலை முன்பு பேரணி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி எதிரே தேசியக்கொடி ஏற்றி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஐஎன்டியுசி தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சிவசாமி தலைமை வகித்தார். திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசினார். அனைவரும் தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அனைத்து தொழிற்சங்கத்தினர், விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் தவிர, திமுக, கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
கண்டனம்
இதுகுறித்து திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "அரசியல் சட்டத்துக்கு எதிரான மத்திய அரசின் ஆட்சி, அதற்கு துணை போகிற மாநில அரசின் ஆட்சியை வீழ்த்த வாக்காளர்கள் சபதம் ஏற்க வேண்டும். புதிய வேளாண் சட்ட திருத்தங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியின்போது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இது மத்திய அரசின் தோல்வியை உறுதி செய்கிறது. எந்த ஆயுதத்தை பயன்படுத்தினாலும், விவசாயிகள் போராட்டம்தான் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டும்" என்றார்.
திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பிலும் சிடிசி சந்திப்பு முதல் தெற்கு காவல் நிலையம் வரை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
இதேபோல, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு, அனைத்து தொழிற்சங்கங்கள், கட்சிகள் சார்பில் இருசக்கர வாகனப் பேரணி, தேசியக்கொடி ஏற்றி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago