காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஆட்சியர்கள் கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினர் 72-வது குடியரசு தின விழா கோலாகலம்

By செய்திப்பிரிவு

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் 72-வது குடியரசுதினவிழா நேற்று கொண்டாடப்பட் டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றி வைத்தனர். 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பொதுநல அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்ட இடங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் மகேஸ்வரி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 24 அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதல்வரின் காவலர் பதக்கங்களை வழங்கினார்.மேலும் 79 பயனாளிகளுக்கு ரூ.81.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செங்கை மாவட்ட குடியரசு தின விழாவில் ஆட்சியர் ஜான் லூயிஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 36 காவலர்களுக்கு முதல்வரின் காவல் பதக்கங்களை வழங்கினார். ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்து இதுவரை 13,500 மரக்கன்றுகளை நட்டுள்ள சிறுமி பிரசித்தி சிங், பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அச்சிறுமி குடியரசு தினத்தில் பாராட்டப்பட்டார். மொத்தம் 600 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட குடியரசு தின விழாவில் ஆட்சியர் பொன்னையா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும் பல்வேறு அரசு துறைகள் சார்பில் 29 பேருக்கு ரூ.2 கோடியே 14 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

இதையடுத்து அரசுத் துறை களில் சிறப்பாக பணியாற்றிய 120 அலுவலர்களுக்கு முதல்வரின் பதக்கங்கள், கேடயங்கள், பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். மூன்று மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் திறந்த வேனில் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக இயக்குநர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். உயர் பயிற்சியக கூடுதல் இயக்குநர் என்.பாஸ்கரன், துணை இயக்குநர்கள் ஜெயலட்சுமி, செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

13,500 மரக்கன்று நட்ட சிறுமிக்குபிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது

செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டி தொழிற்பூங்காவில் உள்ள சில்வான் கவுண்டி என்னும் குடியிருப்பில் வசித்து வருபவர் பிரசித்தி சிங். மத்தியப்பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை மகேந்திரா சிட்டியில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வரும் பிரசித்தி சிங் மரம் நடுவதில் ஆர்வம் கொண்டவர். இவர் 1 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டிருந்தார். அதன்படி இவரது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் அரசுப் பள்ளி, நிலங்களில் இதுவரை 13,500 பழ மரங்களை விதைத்துள்ளார். இவர் பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் மரக்கன்று நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் 18 வயதுக்கு உட்பட்ட சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரி பால புரஸ்கார் எனும் விருதுக்கு பிரசித்தி சிங் தேர்வாகியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்