கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

By செய்திப்பிரிவு

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் குடியரசு தினவிழா நேற்று நடைபெற்றது. ஆட்சியர்சந்திரசேகர் சாகமூரி தேசியக்கொடியினை ஏற்றிவைத்து காவல்துறையின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். 205 பயனாளிகளுக்கு ரூ. 1.16 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதல்வர் பதக்கங்கள் 88 காவலர்களுக்கு வழங்கப்பட்டது.

எஸ்பி அபிநவ், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா,மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், சார்-ஆட்சியர்கள் சிதம்பரம் மதுபாலன், விருத்தாசலம் பிரவின்குமார், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் குடியரசு தினவிழா நேற்று நடைபெற்றது. ஆட்சியர் அண்ணாதுரை தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து பல்வேறு துறைகள் மூலம் 152 பயனாளிகளுக்கு ரூ.70,47,085 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு துறை அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட 464 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இதையடுத்து வளவனூர் அருகே குமாரக்குப்பத்தைச் சேர்ந்த மறைந்த தியாகி தேவநாதனின் வாரிசான தனம்மாள், கோலியனூரைச் சேர்ந்த மறைந்த தியாகி அபரன்ஜி குப்தாவின் வாரிசு சுலோச்சனா ஆகியோரை அவர்களின் வீட்டுக்கு சென்று ஆட்சியர்உள்ளிட்ட அதிகாரிகள் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுவழங்கி மரியாதை செலுத்தினர். அப்போது சுலோசனா தனது சேமிப்பு தொகை ரூ.5,000 நிதியினை ஆட்சியரிடம் வழங் கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன், டிஐஜி எழிலரசன், எஸ்பி ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், திட்ட இயக்குநர் மகேந்திரன், திண்டிவனம் சார் ஆட்சியர் அனு, துணைஆட்சியர் (பயிற்சி) ரூபினா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் எஸ்பி ஜியாவுல்ஹக் முன்னிலையில் ஆட்சியர் கிரண்குராலா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

குடியரசு தினவிழாவை சிறப்பிக்கும் வகையில் மூவர்ண பலூன்களையும், சமாதானத்தை பறைசாற்றும் விதமாக புறாக்களையும் பறக்க விட்டனர்.

இதையடுத்து காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 29 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த 184 அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்களது சிறப்பான பணியினை பாராட்டி நற்சான்றிதழ்களையும் மற்றும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்குபெற்ற காவலர்களுக்கு கேடயங்களையும் ஆட்சியர் வழங்கினார்.

இவ்விழாவில் கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் எச்.எஸ்.காந்த், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் டி.சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்