எல்லையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனிக்கு ராணுவத்தின் உயரிய விருதான வீர்சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவரது மனைவி மத்திய, மாநில அரசுகளுககு நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூனில் காஷ்மீர் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீன ராணுவத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம், கடுக்கலூரைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உட்பட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து பழனியின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 20 லட்சம் நிவாரணம், அவரது மனைவிக்கு மாவட்ட வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. இந்நிலையில் வீரமரணம் அடைந்த பழனிக்கு ராணுவத்தின் உயரிய விருதான வீர் சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பழனியின் மனைவி வானதிதேவியிடம் கேட்டபோது, எனது கணவரின் வீர தீரச் செயலுக்கும், தியாகத்துக்கும் கிடைத்த மரியாதை. நாட்டுக்காக அவர் செய்த சேவைக்கு கிடைத்த இவ்விருதை பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன். அவரது தியாகத்தைப் போற்றி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளன. அதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கும், எனது கணவர் பணியாறறிய 81 பீல்ட் ராணுவப் பிரிவின் கமாண்டிங் ஆபிசர் அஜய் மற்றும் விருது வழங்க வேண்டும் என பரிந்துரைத்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago