மின்வேலியில் சிக்கி உயிரிழக்கும் விலங்குகள் தடுக்க வனத் துறையினர் விழிப்புணர்வு

By செய்திப்பிரிவு

மின்வேலியில் சிக்கி காட்டு யானைஉட்பட வன விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு மேற்கொள்ளும் நடவடிக்கையில் வனத் துறையினர் இறங்கியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை, அதனைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. சமீப காலமாக இப்பகுதிகளிலும் விவசாய நிலங்களிலும் வன விலங்குகள் அதிக அளவில் உலா வருகின்றன. காட்டு யானை, காட்டெருமை, மான்கள், காட்டுப் பன்றி போன்ற வன விலங்குகள் விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவதால் சில விவசாயிகள் தங்களது நிலத்தை சுற்றி வேலி அமைத்து, அதில் நேரடியாக மின் இணைப்பை கொடுக்கின்றனர். அதில் சிக்கி வன விலங்குகள் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் சின்ன குன்னூர் பகுதியில் காட்டு யானையும், உதகை நகரில் காட்டெருமையும் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தடுக்கும் விதமாக விவசாயிகள், கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் வனத் துறையினர் இறங்கியுள்ளனர். உதகை வடக்கு வனத் துறையினர் சுமார் 5000 துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து கிராமம், கிராமமாக சென்று வழங்கி வருகின்றனர். அதில், மின்வேலி அமைப்பதால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதற்கான தண்டனைகள் குறித்தும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கோடை காலம் தொடங்கவுள்ளதால் காட்டுத் தீ ஏற்படுத்தக் கூடாது. இதை மீறுபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்