ஸ்டாலின் நாளை முதல்வராக வரப் போகிறார் மேடையில் வாய் தவறி பேசிய அதிமுக எம்எல்ஏ

By செய்திப்பிரிவு

ஸ்டாலின் நாளை முதல்வராக வரப் போகிறார் என வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏ வாய் தவறி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ பழனிச்சாமி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் பேசியதாவது: சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும். முதல்வர் பழனிசாமி எந்த மதத்தினரையும் இழிவுபடுத்தியதில்லை. ரம்ஜான், கிறிஸ்துமஸ் விழாக்களுக்கு வாழ்த்து சொல்லும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி, தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை. ஒரே பார்வை இருக்க வேண்டும். நாளைக்கு நீங்கள் முதல்வராக வரப் போகி றீர்கள். அத்தனை பேரையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும் என்றார். அப்போது மேடையில் இருந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடனடியாகக் குறுக்கிட்டு, எம்எல்ஏ பேசியதை திருத்திச் சொல்லும்படி கூறினார்.

உடனே பதறிப்போன எம்எல்ஏ, நான் டாக்டராக இருந்தாலும் பரவாயில்லை. என் வாயை பினாயில் போட்டு கழுவி விடுகிறேன். ஸ்டாலின் ஜென்மத்துக்கும் முதல்வர் ஆகவே முடியாது என்றார்.

அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது: திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை. திமுகவினர்தான் கடைகள், தொழில் நிறுவனங்களில் பணம் பறிக்கின்றனர். அதிமுகவினர் இதைச் செய்வதாக ஸ்டாலின் கூறுகிறார். இக்குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபித்தால் நான் அமைச்சர், கட்சிப் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீராக உள்ளது என்பதற்கு ஓசூர் கொள்ளையர்களை 18 மணி நேரத்தில் போலீஸார் பிடித்ததே சாட்சி என்றார். கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் மருதராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்