திருத்துறைப்பூண்டி உழவர் சந்தைக்கு அதிகாலையில் பேருந்து இயக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருத்துறைப்பூண்டி உழவர் சந்தைக்கு அதிகாலை நேரத்தில் இயக்கப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கடந்த 20 ஆண்டுகளாக உழவர் சந்தை இயங்கி வருகிறது. இந்த உழவர் சந்தைக்கு இயக்கப்படும் இலவச பேருந்துகள் மூலம் கரியாப்பட்டினம், செட்டிப்புலம், அவரிக்காடு, மருதூர் ஆகிய கிராமங்களிலிருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில், வேதாரண்யம் பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 4 மணிக்கு இயங்கிவந்த உழவர் சந்தைக்கு செல்லும் பேருந்துகள் தற்போது இயக்கப்படுவதில்லை.

இதனால், விவசாயிகளால் உரிய நேரத்தில் காய்கனிகளை உழவர் சந்தைக்கு கொண்டு வர முடிவதில்லை.

மேலும், தேங்காய், இளநீர் மற்றும் காய்கறிகளை பட்டுக்கோட்டை உழவர் சந்தைக்கு கொண்டு செல்லும் விவசாயிகளும் இந்த வழித்தடத்தில் இயங்கிய பேருந்தில்தான் சென்று வந்து கொண்டிருந்தனர்.

ஆனால், அதிகாலை நேரத்தில் திருத்துறைப் பூண்டி உழவர் சந் தைக்கு இயக்கப்பட்ட பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால், இப் பகுதி விவசாயிகள் தாங்கள் விளை வித்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகளின் அடிப்படை வருமானம் காய்கனி விற்பனையில் தான் உள்ளது என்பதை அறிந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வேதாரண்யத்தில் இருந்து அதிகாலையில் திருத்துறைப் பூண்டி உழவர் சந்தைக்கு செல்லும் பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் வலி யுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்