திருப்பூர் மாவட்டம் காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளிலுள்ள பி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட 7 நாட்கள் தண்ணீர் என்பதற்கு பதிலாக, 3 நாட்கள் மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறி, காங்கயத்தில் 5-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜக விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ், வெள்ளகோவில், காங்கயம் பகுதி விவசாயிகள் ஆகியோர், ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தியை சந்தித்து பேசினர்.
பின்னர் ஜி.கே.நாகராஜ் கூறும்போது, "கான்கீரிட் வாய்க்காலில் தண்ணீர் கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை. நீர் இழப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தோம். திருப்பூர் ஆட்சியரை சந்தித்த நிலையில், கோவை வந்திருந்த தமிழக முதல்வரையும் சந்தித்து மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்தார். கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலையிட்டு, விவசாயப் பகுதிகளுக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டும். அணையில் போதிய நீர் இருந்தும், 200-க்கும் மேற்பட்டஇடங்களில் தண்ணீர் திருடப்படுவதை தடுக்க வேண்டும்" என்றார்.
இதுதொடர்பாக ஆட்சியர் கூறும்போது, "பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்துக்காக (பிஏபி) திருமூர்த்தி அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை, பரம்பிக்குளம் பிரதான கால்வாய், கிளை கால்வாய்களில் இருந்து முறையற்ற வகையில் எடுப்பதால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. தண்ணீர் திருட்டை தடுக்க வருவாய், காவல், பொதுப்பணி, மின்வாரியம் ஆகிய 4 துறை அலுவலர்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுவர். முறைகேடாக கால்வாய்களில் தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதுடன், விவசாய பூமியின் மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago