உதகை அருகே மசினகுடி பகுதியில் காட்டு யானைக்கு தீ வைத்த சம்பவத்தில் கைதான 3 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக,முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மசினகுடி பகுதியில் பல ஆண்டுகளாக சுற்றித்திரிந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை, கடந்த 19-ம் தேதி தீக்காயத்துடன் காது கிழிந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது. வனத் துறையினர் நடத்திய விசாரணையில், மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியியை சார்ந்த மல்லன் என்பவரது இரண்டு மகன்களும், அதே பகுதியை சார்ந்த பிரசாந்த் (36) என்பவரும் டயரில் தீ வைத்து யானையின் மீது வீசியது தெரியவந்தது. மல்லனின் மூத்த மகன் ரிக்கி ராயன் (31) தப்பியோடிய நிலையில் ரேமண்ட் டீன் (28) மற்றும் பிரசாத்(36) ஆகிய இருவரையும்சிங்காரா வனத் துறையினர் கைது செய்தனர். இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கூடலூர் மாஜிஸ்திரேட் பாபு உத்தரவிட்டார்.
சம்பவம் நடந்த வீட்டில் அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகளை தங்க வைத்திருந்த 3 விடுதி அறைகளுக்கு கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்தனன் மற்றும் மசினகுடி ஊராட்சி செயலாளர் கிரண் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவு சீல் வைத்தனர்.
காட்டு யானைக்கு தீ வைத்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago