பாளேகுளி ஏரியில் இருந்து சந்தூர் ஏரிக்கு வரை கால்வாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கேட்டு 150-வது முறையாக மனு அனுப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி அணையின் இடதுபுறக் கால்வாய் வழியாக உபரி நீர் பாளேகுளி ஏரிக்கு செல்கிறது. இந்த ஏரியில் இருந்து சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப கால்வாய் அமைக்கும் திட்டம் கடந்த 2012-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. கால்வாய் அமைக்கும் போது மரங்கள் அகற்றப்பட்டன. இதற்காக நிலம், மரம் கொடுத்த 700 குடும்பத்தினர், உரிய இழப்பீடு கேட்டு தொடர்ந்து மனுக்கள் அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாளேகுளி - சந்தூர் ஏரி இடதுபுறக் கால்வாய் நீட்டிப்பு பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவகுரு கூறும்போது, ‘‘கால்வாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதல்வர், தலைமைப் பொறியாளர், ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் உட்பட அலுவலர்களுக்கு தொடர்ந்து மனுக்கள் அளித்து வருகிறோம்.
நாங்கள் அளிக்கும் மனுக்களுக்கு கடந்த ஒரு ஆண்டாக, நில நிர்வாக ஆணையருக்கு முன்மொழிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற பதில் மட்டும் கிடைத்து வருகிறது.
எங்கள் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, இனியும் கால தாமதம் இல்லாமல் கால்வாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி மின்னஞ்சல் மூலம் முதல்வருக்கு 150-வது முறையாக மனு அனுப்பி உள்ளோம்,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago