வேலூர் மாவட்ட காவல் துறையில் இருந்த மோப்ப நாய் சன்னி உடல்நலக் குறைவால் உயிரிழந்ததால் காவல் துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
தமிழக காவல் துறையினர் குற்ற வழக்கு விசாரணை மற்றும் வெடிகுண்டுகளை கண்டறியவும் மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் காவல் துறையின் மோப்ப நாய் பிரிவில் சிம்பா, சன்னி, லூசி, அக்னி என்ற 4 மோப்ப நாய்களை ஈடுபடுத்தி வந்தனர்.
இதில், சன்னி மற்றும் சிம்பா மோப்ப நாய்களை கொலை, திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் சென்ற பாதைகளை கண்டுபிடிக்க ஈடுபடுத்தி வந்தனர். மோப்ப நாய் சன்னி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் பரிசோதனையில் வாய் பகுதியில் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னையில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர், வேலூர் கொண்டு வரப்பட்டு கண்காணித்து வந்தனர். அறுவை சிகிச்சை காரணமாக சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்த சன்னி நேற்று காலை உயிரிழந்தது. இதனையடுத்து, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு காவல் துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்ட காவல் துறைக்கு கடந்த 2015-ம் ஆண்டு குட்டியாக வந்த சன்னி, படிப்படியாக பல்வேறு கட்ட பயிற்சிகளை பெற்று குற்ற வழக்குகளில் காவல் துறைக்கு உதவியாக இருந்து வந்தது. கடந்த ஆண்டு உமராபாத்தில் நடைபெற்ற கொலை வழக்கு மற்றும் காட்பாடி விருதம்பட்டில் இளைஞர் கொலை வழக்கு விசாரணையில் மோப்ப நாய் சன்னியின் பங்கு முக்கியமானதாக இருந்துள்ளது என காவல் துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 2015-ம் ஆண்டு குட்டியாக வந்த சன்னி, பல்வேறு கட்ட பயிற்சிகளை பெற்று குற்ற வழக்குகளில் காவல் துறைக்கு உதவியாக இருந்து வந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago