ராகி சாகுபடியில் நாற்று விடுவதில் கவனம் செலுத்தினால் கூடுதல் மகசூல் பெறலாம் என கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் ஒவ்வொரு ஆண்டும், 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ராகி சாகுபடி செய்யப்படுவதும், போகி நாற்று விடுவதும் வழக்கம். உயர் விளைச்சல் தரும் சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்துவதன் மூலம், அதிக மகசூல் பெறலாம்.
தற்போது கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், நடப்பு பருவத்துக்கேற்ற ரகமான கோ-15 விதைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஒரு ஏக்கருக்கு 5 சென்ட் நாற்றங்கால் வயல் தேர்வு செய்தால் போதுமானது. கட்டிகள், கற்கள் இல்லாமல் நன்கு தூளாக்கி சமன் செய்யப்பட்ட நிலம் ராகி விதைகள் நன்கு முளைப்பதற்கு உதவி செய்யும். கடைசி உழவுக்கு முன், 15 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 200 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் நாற்றங்கால் முழுவதும் சீராக பரவுமாறு தெளித்து, பின் மேட்டுப் பாத்தி தயார் செய்யவும். அதில் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை விதைக்க வேண்டும்.
விதைத்த பிறகு, நன்கு மக்கிய தொழு எரு அல்லது மண் கொண்டு விதைகளை மேலாக மூட வேண்டும்.
எனவே விதைப்பின் போது கவனம் தேவை. நாற்றங்காலில் விதைப்புப்பணி முடிந்தவுடன் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுதல் அவசியம். விதைத்த 17 முதல் 20 நாட்களுக்குப் பின்னர் நாற்றைப் பறித்து நடவு செய்ய வேண்டும். இவ்வாறு தொழில் நுட்பங்களை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் 15 முதல் 20 சதவீத கூடுதல் மகசூல் பெறலாம். எனவே, இந்த பருவத்தில் ராகி சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் இதனை தவறாது பின்பற்றி பயனடையலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago