தமிழகத்தில் முதன் முறையாக கிருஷ்ணகிரி அருகே பாறை ஓவியத்தில் கால்நடைகளை மீட்டல், கால்நடைகளை கவர்தலை தெரி விக்கும் தொறு பூசல் வரையப்பட்டுள்ளது என அருங்காட்சியக காப்பாட்சியர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அருங்காட்சிய கமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த பாறை ஓவியங்கள், நடுகற்களில் தொறு பூசல் (கால்நடைகள் மீட்டல், கால்நடைகளைக் கவர்தல்) பற்றிய சிறப்பு கருத்தரங்கு நடந்தது. ஆய்வுக்குழு தலைவர் நாராயணமூர்த்தி தலைமை வகித்தார். நடுகற்களில் தொறுபூசல் குறித்து தொல்லியல் ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார், ஆநிரைகள் குறித்து பேராசிரியர் வாசுகி, சங்க இலக்கியத்தில் தொறுபூசல் குறித்து வரலாற்று ஆசிரியர் ரவி ஆகியோர் பேசினர். கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஓவியங்களில் தொறுபூசல் குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் பேசியதாவது:
ஜெகதேவியை அடுத்த கீழ்சீனிவாசபுரத்திலிருந்து காட்டுப்பகுதி வழியாக செல்லும் பாதையையொட்டி அமைந்துள்ள பன்னிகுண்டு என்ற பாறையின் குகைபோன்ற அமைப்பில் இடப்புறம், வலப்புறம் என 2 ஓவியத் தொகுதிகள் காணப்படுகின்றன. அங்கே தமிழகத்தில் முதன் முறையாக பாறை ஓவியத்தில் தொறுபூசல் வரையப்பட்டுள்ளது.
இடதுபுறத்தில் உள்ள ஓவியத் தொகுதியில் வரிசையாக சிறிய அளவில் 7 மனித உரு வங்கள் கையில் ஆயுதம் ஏந்தி போரிடுவதுபோல் வரையப் பட்டுள்ளன. இதில் 4 ஓவியங்கள் தெளிவாகவும், 3 ஓவியங்கள் சிதைந்தும் உள்ளன. இவர்கள் அனைவரும் வரிசையாக வரையப்பட்டுள்ளனர். வலது கோடியில் சற்று உயரத்தில் வரையப்பட்டுள்ள மனித உருவம், ஒரு விலங்கினை ஒரு கையில் பிடித்தவாறும், மறு கையில் வாளை ஏந்தியும் உள்ளது. இவ்விலங்கின் கொம்பு மற்றும் உடல், வால் அமைப்புகளைக் கொண்டு மாடு எனக் கொள்ளலாம். மாட்டின் முகம் வரிசையான மனிதர்களை நோக்கி உள்ளது. இந்த ஓவியத் தொகுதியானது, சங்க இலக்கியங்கள் கூறும் ஆநிறை (கால்நடை) கவர்தல் மற்றும் ஆநிறை மீட்டல் ஆகியவற்றுக்காக நடக்கும் பூசலை சித்தரிப்பதாக உள்ளது. தொறு பூசலில் இறந்த வீரனின் நினைவாக இது வரையப்பட்டுள்ளது.
இவ்வோவியத் தொகுதியானது சங்ககால தொறுபூசல் என்னும் மிகவும் போற்றப்பட்ட வாழ்வியல் பகுதியை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது இம்மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்துக்கே பெருமை தரும் செய்தி. இவ்வாறு காப்பாட்சியர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி வரலாற்று மாணவிகள் கலந்து கொண் டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago