மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விவசாயப் பணியில் தொழிலாளர்களை ஈடு படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி.மலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். காணொலி மூலம் விவசாயிகள் பேசும்போது, “தி.மலை மாவட்டத்தில் ‘நிவர், புரெவி’ ஆகிய 2 புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை விரைவாக வழங்க வேண்டும். தஞ்சைக்கு இணையாக நெல் உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். மாட்டுக் கொட்டகைக்கு விண்ணப்பித் துள்ளவர்களுக்கு மானிய விலையில் மாட்டுக் கொட்டகை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விவசாயப் பணியில் தொழிலாளர் களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல், மணிலா உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். போளூர் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலை யில் வழங்கப்படாமல் உள்ள கரும்பு கொள்முதல் தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும்போது, அதற்கான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். விண்ணப்பித் துள்ள அனைவருக்கும் விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும்.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், மீண்டும் விவசாயம் செய்ய, அனைத்து வங்கிகள் மூலம் பயிர்க்கடன் வழங்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் மாதத்துக்கு 2 முறை கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள விவசாய கூட்டத்துக்கு விவசாயிகளை நேரில் அழைக்க வேண்டும்” என்றனர்.
விவசாயிகள் கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago