காங்கயத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டுமென, குறைதீர் கூட்டத்தில் பெண்கள் வலியுறுத்தினர். மாதாந்திர விவசாயிகள் குறைதீர்கூட்டம், திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது.
விவசாயிகள் பேசும்போது, ‘‘வெள்ளகோவில் பிஏபி கடைமடை விவசாயிகள், கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போரட்டத்தை தொடங்கியுள்ளனர். 48 ஆயிரம் ஏக்கர் பாசன பகுதியில் 7 நாள் தண்ணீர் திறப்பு, 7 நாள்தண்ணீர் அடைப்பு என்ற முறையில் பயன்பெற்று வந்தோம்.
தற்போது 3 நாட்கள் மட்டுமே வழங்குகின்றனர். பாசனப் பகுதியில் 1000 அடிக்கும் கீழ் நிலத்தடி நீர்மட்டம் சென்றுவிட்டதால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையினர் விரைந்து நடவடிக்கைஎடுக்கும் வகையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்’’ என்றனர்.
இதில் பங்கேற்ற பெண்கள் பேசியதாவது: எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிஏபி தண்ணீர் கிடைக்காததால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது குடிநீருக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசை நம்பித்தான் மக்கள் உள்ளனர். ஆனால், அரசு அலட்சியமாக இருந்தால் என்ன செய்வது? எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஏற்கெனவே வருவாய் இல்லாத நிலையில், மிகுந்த சிரமத்துக்கு இடையேதான் இந்த போராட்டம் நடைபெறுகிறது. விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
திருப்பூர் ஆட்சியர் கூறும்போது, "இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கையை, அலுவலர்கள் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். காணொலி வாயிலாக கூட்டம் நடப்பதால், கூடுதல் கவனத்துடன் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க வேண்டும்" என்றார்.
ஆலோசனை
முன்னதாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆனந்தராஜா, பயிர் பாதுகாப்புத் துறை விஞ்ஞானி பி.ஜி.கவிதா ஆகியோர்,பயிர் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.திருப்பூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக விளக்கப்பட்டன. தொடர்மழை காரணமாக நெல்,வெங்காயம், மக்காச்சோளம் போன்ற பயிர்கள் நோய் தாக்குதலால் சேதமடைந்துள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago