உயர் மின்கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காங்கயம் அருகே படியூரில் 2-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர் மின்கோபுரங்கள் திட்டங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் உயர் மின் வழித்தட திட்டத்தை சாலையோரமாக (கேபிள்) அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்திட்டத்தையும், இந்திய தந்தி சட்டத்தையும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், திட்டம் தொடர்பான அனைத்து பணிகளையும் நிறுத்திவைக்க வேண்டும். உயர் மின்கோபுரங்களால் பாதிக்கப்படுவோருக்கு சொலேசியம் வழங்கப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களின் உரிமையான 100 சதவீத சொலேசியம் எனப்படும் ஆதாரத்தொகையை அளிக்க வேண்டும்.
போராட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 38 வழக்குகளை, தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூரில் நேற்று முன்தினம் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டி, விவசாயிகள் தங்களது மேலாடைகளை களைந்து அரை நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமைவகித்தார். ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago