நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜவுளி உற்பத்திக்கு மூலப்பொருளாக இருக்கும் நூல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. அத்துடன் செயற்கை பற்றாக்குறையும் ஏற்படுத்தப்படுகிறது. இதனால், திருப்பூர் மாவட்டத்தில் முதன்மைத் தொழிலாக இருக்கும் பின்னலாடை உற்பத்தி ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தயாரிப்புகள், கிராமப்புறங்களில் இருக்கும் விசைத்தறி ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்திக்கும் நிலையும் உள்ளது.

இந்திய பருத்திக் கழகம் (சிசிஐ) மூலமாக, உள்நாட்டு தேவைக்கு பஞ்சு, நூல் கிடைப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்திய பிறகு, ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலமாகதான் உள்நாட்டு ஜவுளித் தொழில், பல லட்சம் தொழிலாளர் வேலை வாய்ப்பு ஆகியவற்றை பாதுகாக்க முடியும். எனவே நூல் விலையை கட்டுப்படுத்தவும், பதுக்கல், செயற்கை பற்றாக்குறை இல்லாமல் தொழில் துறைக்குத் தேவையான நூல் கிடைக்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE