காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இந்த வாகன அணிவகுப்பை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 32-வதுசாலை பாதுகாப்பு மாத விழா ஜன.18-ம் தேதி முதல் பிப்.17-ம் தேதிவரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக இருசக்கர வாகன அணிவகுப்பு நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி மூங்கில் மண்டபம், காந்தி சாலை, ரங்கசாமி குளம் மற்றும் கீரை மண்டபம் வழியாக மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் இந்தப் பேரணி முடிவடைந்தது. இந்த அணிவகுப்பில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
இப்பேரணியைத் தொடங்கி வைத்து பேசிய ஆட்சியர் மகேஸ்வரி, “இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகளை மதித்து நடக்க வேண்டும். வாகனம்ஓட்டும் பெண்கள் முறையாக பயின்றுதாங்களாகவே வாகனங்களை ஓட்டுவதன் மூலம் அவர்களுடைய பணிகளுக்கு யாரையும் சார்ந்திருக்கும் அவசியம் ஏற்படாது. வாகனத்தில் செல்லும்போது பெண்கள் நீளமாக பறக்கும் வகையில் ஆடைகளை அணிதல் கூடாது” என்றார்.
இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (காஞ்சிபுரம்) தினகரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பெரும்புதூர்) சசி, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago