ராணுவ வீரர் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

By செய்திப்பிரிவு

காட்பாடியில் ராணுவ வீரர் கொலை வழக்கில் தொடர்புடைய 3 இளைஞர்களை குண்டர் சட்டத் தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தர விட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ் (24). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தீபக் (23) என்பவரும் லடாக்கில் ராணுவ வீரர்களாக பணியாற்றி வந்தனர். இரு வரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விடுமுறையில் ஊருக்கு வந்தனர்.

யோகராஜிக்கு டிச.19-ம் தேதி பிறந்த நாள் என்பதால், தீபக் மற்றும் அவரது நண்பர் நேதாஜி (23) ஆகியோர் மதுபான விருந்து அளிக்குமாறு கேட்டுள்ளனர்.

அதன்படி, கழிஞ்சூர் ரயில்வே கேட் அருகேயுள்ள பகுதியில் யோகராஜ் உள்ளிட்ட மூவரும் டிசம்பர் 18-ம் தேதி இரவு மதுபானம் அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இளைஞர்கள் சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், கைகலப்பு ஏற்பட்டபோது மர்ம நபர்கள் வைத்திருந்த கத்தியால் யோகராஜ், தீபக் மற்றும் நேதாஜி ஆகியோருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து மர்ம நபர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

படுகாயம் அடைந்த மூன்று பேரையும் அவ் வழியாகச் சென்ற வர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் யோகராஜ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விருதம்பட்டு காவல் ஆய்வாளர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்.

கொலை வழக்கு தொடர்பாக சத்துவாச்சாரியைச் சேர்ந்த விஜயகுமார் (26), வினோத்குமார் (21), காட்பாடி குமரப்பா நகரைச் சேர்ந்த அக்ஷய்குமார் (24) ஆகி யோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆட்சியர் சண்முகசுந்தரத்துக்கு பரிந்துரை செய்தார்.

இதனையேற்று, மூன்று பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்