சிவகங்கை மாவட்டம் சூராணம் அருகே வெள்ளத்தில் இருந்து 3 கிராமங்களைக் காப்பாற்ற தேவகோட்டை-பரமக்குடி நெடுஞ்சாலையை மக்களே உடைத்தனர். இதனால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தொடர்மழையால் சூராணம் அருகே வலனை கிராமம் அருகே குருந்தங்குடி கண்மாய் நிரம்பி கலுங்கில் இருந்து தண்ணீர் வெளியேறியது. ஆனால் அதனருகே குறுக்கே செல்லும் தேவகோட்டை-பரமக்குடி நெடுஞ்சாலையால் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக கண்மாய் உடையும் நிலை ஏற்பட்டது. கண்மாய் உடைந்தால் வலனை, நேமம், முத்துப்பட்டணம் ஆகிய 3 கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், கிராமமக்களே சாலையை உடைத்துவிட்டனர்.
இதையடுத்து அவ்வழியாக வெள்ளநீர் வெளியேறி வருகிறது. மேலும் சாலை உடைக்கப்பட்டதால் தேவகோட்டை, பரமக்குடி, சூராணம், சருகணி பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் தேவகோட்டையில் இருந்து பரமக்குடிக்கு காளையார்கோவில் வழியாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வலனை கிராமமக்கள் கூறியதாவது: தேவகோட்டை - பரமக்குடி சாலையில் பாலம் கட்டினால்தான் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago