சிவகங்கை மாவட்டம், மானா மதுரை தொகுதியில் பல கி.மீ. சென்று கிராம மக்கள் வாக்களிக்கும் நிலை உள்ளதால், அதை மாற்ற வேண்டுமென ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டியிடம் நாகராஜன் எம்எல்ஏ புகார் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி வெளியிட்டார். தேர்தல் பார்வையாளர் ஆப்ரஹாம், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன், சுரேந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தொகுதி அதிமுக எம்எல்ஏ நாகராஜன் பேசியது: மானாமதுரை தொகுதியில் சில கிராம மக்கள் வாக்களிக்க பல கி.மீ. தூரம் செல்ல வேண்டியுள்ளது. அவர்களுக்கு அருகிலேயே வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்றார்.
பிற கட்சியினர் பேசுகையில், ‘புதிய வாக்காளர்களுக்கு இதுவரை அடையாள அட்டை கிடைக்கவில்லை. இறந்தவர்களின் பெயர்களை நீக்கவில்லை என்றனர்.
பின்னர் ஆட்சியர் பேசியதாவது: புதிய வாக்காளர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்படும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு முகவரி மாறியது குறித்து ஆய்வு செய்யப்படும். 2 கி.மீ.க்கு அப்பால் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago