தருமபுரியில் புதிதாக 417 வாக்குச் சாவடிகள் அமைக்க நடவடிக்கை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 15.99 லட்சம் வாக்காளர்கள்

By செய்திப்பிரிவு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்கள் நேற்று வெளியிட்டனர்.

தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டார். இந்த பட்டியலின்படி தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் சேர்த்து 12 லட்சத்து 60 ஆயிரத்து 909 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஒரு மாதம் முன்பு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் எண்ணிக்கைக்கு பின்னர் தற்போது புதிதாக 40 ஆயிரத்து 640 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 265 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக சேர்க்கப்பட்டவர்களில் 30 ஆயிரத்து 475 பேர் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் ஆவர். இந்தப் பட்டியல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித் துள்ளார். ஆட்சியர் மேலும் கூறியது:

தருமபுரி மாவட்டத்தில் 856 வாக்குச் சாவடி மையங்களில் ஏற்கெனவே 1478 வாக்குச் சாவடிகள் உள்ளன. கரோனா தொற்று சூழல் காரணமாக 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என்ற அடிப்படையில் வாக்குச் சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் கூடுதலாக 417 வாக்குச் சாவடிகள் அமைக்க தேவையான இடங்களை பட்டியலிட்டு தேர்தல் ஆணையத்துக்கு திட்ட வரைவு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, அரூர் துணை ஆட்சியர் பிரதாப், மாவட்ட வழங்கல் அலுவலர் தணிகாசலம், கலால் உதவி ஆணையர் தேன்மொழி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் இளவரசி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பதிவு சரிபார்க்க அழைப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசும்போது, ‘‘ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட 6 தொகுதிகளில் 8 லட்சத்து 5 ஆயிரத்து 518 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 93 ஆயிரத்து 220 பெண் வாக்காளர்களும், இதரர் 280 என மொத்தம் 15 லட்சத்து 99 ஆயிரத்து 18 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக 1863 வாக்குச்சாவடிகளிலும், ஆட்சியர், நகராட்சி, மாநகராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களில் வாக்காளர்கள் தங்களது பதிவுகள் மற்றும் திருத்தங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்,’’ என்றார்.

தெலுங்கு, கன்னட மொழிகளில் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என அனைத்து கட்சியினர், ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தளி பிரகாஷ், வேப்பனப்பள்ளி முருகன், ஓசூர் சத்யா, திமுக மாணவரணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், தேசியவாத காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன், கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்