வேலூர் மார்க்கெட், பஜார் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

By செய்திப்பிரிவு

வேலூரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா, பிளாஸ்டிக் பொருட்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர் மார்க்கெட் மற்றும் பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, போதை வஸ்துகள், பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின்பேரில், வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ராஜேஷ், நாகேஸ்வரன், சுரேஷ் உள்ளிட்ட குழுவினர் வேலூர் தோட்டப்பாளையம், சுண்ணாம்புகார தெருவில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

15-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 2 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 20 கிலோ எடையுள்ள பான்மசாலா, பான்பராக், ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனைக்காக இருப்பது தெரிய வந்தது. அவற்றை உணவு பாது காப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்து, கடையின் உரிமை யாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதையடுத்து, சுண்ணாம்புகார தெருவில் நடத்தப்பட்ட சோதனையில் அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், தட்டுகள், கேரி பேக் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, அவற்றை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து கடையின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அரபாதம் விதித்தனர்.

மேலும், அதேபகுதியில் இருந்த ஒரு கடையில் எச்சரிக்கை வாசகம் இல்லாமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அரசால் தடை செய்யப்பட்ட போதைபொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது தெரயவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ் எச்சரிக்கை விடுத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்