திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்களில், பத்திரப்பதிவுக்கு இணையதளம் மூலமாக பணம் செலுத்தி ரசீது பதிவு செய்யப்பட்டதில் அதிகளவில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் மண்டல பத்திரப்பதிவுத் துறை தலைவர் ஜெகதீசன் ஆய்வு மேற்கொண்டதில், கணினியில் ஏற்கெனவே பதிவாகியுள்ள ரசீதை அழித்து, மீண்டும் புதிதாக ரசீது வழங்கியதுபோல காட்டி பண மோசடி நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு, இணைப் பதிவாளர்கள் உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பத்திரப்பதிவுத் துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மாநகர மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் பாலமுருகன், ஆய்வாளர் சொர்ணவள்ளி தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக, ஆன்லைனில் குறிப்பிட்ட தேதிகளில் பத்திரப்பதிவுத் துறைமென்பொருளில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பணப்பரிமாற்றங்கள், பதிவேற்றப் பட்ட, நீக்கப்பட்ட தகவல்கள் குறித்து பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தினர் நேற்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது," ‘தனியார் மென்பொருள் நிறுவனத்தினர் மூலமாக பத்திரப்பதிவுத் துறை மென்பொருளில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள்தான் அதை பராமரித்து வருகின்றனர். ஆய்வில் தெரிய வந்த தகவல்கள் குறித்து விசாரித்துள்ளோம். வழக்கு பதிவுக்கு முந்தைய விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago