வெள்ளகோவில் பிஏபி கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

By செய்திப்பிரிவு

வெள்ளகோவில் பிஏபி கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி, காங்கயத்தில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஆதரவாக காங்கயம், வெள்ளகோவிலில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

காங்கயம் - கோவை சாலையிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காங்கயம் - வெள்ளகோவில் நீர் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.

இதில் பங்கேற்றவர்கள் பேசும்போது, "பிஏபி வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் வர வேண்டிய தண்ணீரை விடாமல், பிஏபி நிர்வாகம் பல ஆண்டுகளாக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித் துறை அலுவலகத்திலும் முறையிட்டு போராட்டம் நடத்தியும் பலன் இல்லை. சமச்சீர் பாசனம் என்று பெயரளவில் வைத்துக்கொண்டு, கிளைக்கு தேவையான தண்ணீரை பிஏபி நிர்வாகம் அளிப்பதில்லை. எங்களுக்கான தண்ணீரையும் அணையில் இருந்து எடுக்கிறார்கள். ஆனால், அதை பாசனத்துக்கு தருவதில்லை. முறைகேடாக விநியோகம் செய்கிறார்கள்.

எனவே, பிஏபி பாசன தண்ணீர் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கடைமடைப் பகுதியான வெள்ளகோவில், காங்கயம் பகுதிகளுக்கு உரிய தண்ணீரை முறையாக வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் வெள்ளகோவில், காங்கயம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

கடையடைப்பு

விவசாயிகளின் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்து, வெள்ளகோவில் மற்றும் காங்கயம் பகுதியில் பிரதான சாலைகள், திருப்பூர் சாலை, சென்னிமலை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலை, கோவை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உணவகங்கள், எலெக்ட்ரிக் கடைகள், ஜவுளிக் கடைகள், தேநீர் கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்