காஞ்சி மாவட்டத்தில் உள்ள 234 பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் 90 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.
பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம், காஞ்சி நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
செங்கை மாவட்டத்தில் 574 பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகள் மீண்டும் திறந்ததையொட்டி தமிழ்நாடுபாடநூல் கழக நிர்வாக இயக்குநர் ஜெயந்தி செங்கை மாவட்டம் நந்திவரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிக்கல்வித் துறையின் மேல்நிலைப் பள்ளிகளின் இணை இயக்குநர் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உடன் இருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 757 பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 1,09,934 மாணவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்கு வந்திருந்தனர்.
திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அமிர்தாபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளிகளில் ஆட்சியர் பொன்னையா ஆய்வுமேற்கொண்டார். இதில் மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, திருத்தணி மாவட்ட கல்வி அலுவலர் முனிரத்தினம் உடனிருந்தனர்.
மூன்று மாவட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவ - மாணவியரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமி நாசினி வழங்கபட்டு, வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு வகுப்பறையில் 25 மாணவ - மாணவியர் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago