திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தின் இழந்த உரிமைகளை மீட்போம் தேனியில் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் மாநிலத்தின் இழந்த உரிமைகளை மீட்போம் என தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

தேனி அருகே அரண்மனைப் புதூரில் திமுக சார்பில் இன்று (ஜன.20) மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தங்கதமிழ்ச்செல்வன் கூறியதாவது: ஸ்டாலின் முதல்வரானதும் ஜெயலலிதா இறப்பின் மர்மத்தைக் கண்டறிந்து உண்மையை வெளிப்படுத்து வோம். இறந்தது ஒரு முதல்வர். எனவே இதன் பின்னணியை ஆராய்வது அவசியம். அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை ஆளுநரிடம் ஸ்டாலின் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதே பட்டியல் மோடியிடம் இருப்பதால் மத்திய அரசு சொல்வதைக் கேட்க வேண்டிய நிலையில் அதிமுக உள்ளது. ஆட்சி முடிந்ததும் அதிமுகவின் சப்தநாடி ஒடுங்கும். ஆட்சியில் இருக்கும் வரைதான் ஒன்றாக இருப்பார்கள். பின்பு தலைமையின் பேச்சை யாரும் கேட்கமாட்டார்கள். பல பிரிவுகளாக அதிமுக சிதறும்.

தமிழகத்தில் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் இருந்தும் குரல் மட்டுமே கொடுக்க முடிகிறது. நீட்தேர்வு, மின் கொள்கை, வேளாண் திருத்தச் சட்டம், ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு போன்றவற்றுக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். பாஜக எங்கள் கோரிக்கை எதனையும் நிறைவேற்ற மறுக்கிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் இழந்த உரிமைகள் மீட்கப்படும். மத்திய அரசைத் தட்டிக்கேட்கும் கட்சியாக திமுக. உள்ளது. ஆட்சிக்கு வந்ததும் மக்கள் கொடுத்த மனுவின் அடிப்படையில் பிரச்சினைகளைச் சரி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பெரியகுளம் எம்எல்ஏ. சரவணக்குமார், நகரப் பொறுப்பாளர் பாலமுருகன், ஒன்றியப் பொறுப்பாளர் ரத்தினசபாபதி, பொதுக்குழு உறுப்பினர் ஜீவா ஆகியோர் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்