தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும் என கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறினார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பர்கூரில் எம்ஜிஆர் 104-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக, அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, சசிகலாவுக்கும், எங்களுக்கும் இடையே எவ்வித பஞ்சாயத்தும் செய்யவில்லை. அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் ஆட்சி செய்யும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும். அதிமுகவில் தற்போது புதிய பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் பட்டியல் வெளி வரும் போது கூட கருத்து வேறுபாடுகள் வந்து மீண்டும் சமாதானம் ஏற்படும். அதன் அடிப்படையில் தான், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கக்கூடிய இயக்கத்தில் அண்ணன்- தம்பி இடையே பிரச்சினைகள் வரும். ஆகவே தான் நாம் ஒற்றுமையாக இருப்போம் என கோடிட்டு காட்டியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின் போது மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பால கிருஷ்ண ரெட்டி, பர்கூர் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago