திருவள்ளுவர் பல்கலைக் கழகத் தில் மத்திய அரசின் கரோனா விதிமுறைகளை மீறி பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கட்டாயம் என்ற சுற்றறிக்கை வெளியானதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பல்கலைக்கழகத்தில் மட்டும் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு பயன்பாட்டில் இருந்தது. கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் ஊரடங்கு தளர்த் தப்பட்ட நிலையில், படிப்படியாக செயல்பட ஆரம்பித்தது.
இதற்கிடையில், கரோனா பரவல் அச்சத்தால் கல்வி நிலையங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டுக்கு பதிலாக அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்களின் அடையாள அட்டையை காண்பித்து வருகைப் பதிவேட்டை பதிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் மட்டும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு கட்டாயம் என சுற்றறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு பல்கலைக்கழக பணியாளர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மறுப்பதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இது தொடர்பாக பல்கலைக் கழக நிர்வாகத் தரப்பில் விசாரித்த போது, ‘‘நாக் ஆய்வுக்காக பயோமெட்ரிக் நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டது உண்மைதான். ஆனால், அதை திரும்பப் பெற்றுக்கொண்டோம். இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை’’ என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago