பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தல்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக, ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.

பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியிலுள்ள ஆவரங்குட்டை நீர் நிலை, விளைநிலங்களுக்கு ஆதாரமாகவும், அருகில் உள்ள குக்கிராமங்களுக்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கவும், முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. ஆவரங்குட்டை ஆக்கிரமிக்கப்படுவது குறித்து, தமிழக முதல்வரின் தனிப்பிரிவு வரை மனு அனுப்பி இருந்தோம்.

இந்நிலையில், குட்டை அருகே அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. அதன் அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து கழிப்பிடம் கட்ட பூமிபூஜை போடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அங்கன்வாடி மையம் அருகே அபாய நிலையில் இருக்கும் கழிப்பிடத்தை அகற்ற வலியுறுத்தி வரும் நிலையில், புதிதாக கழிப்பிடம் கட்டக்கூடாது. அபாய நிலையில் இருக்கும் கழிப்பிடத்தை இடித்துவிட்டு, நீர் நிலை பகுதியில் கழிவறை கட்டும் திட்டத்தையும் கைவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

பெரியார் - அண்ணா

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், "அரசியல் ரீதியாக பெரியாரும், அண்ணாவும் முதன் முதலான சந்தித்த இடம் திருப்பூர். அதனை நினைவூட்டும் வகையில், திருப்பூர் ரயில் நிலையம் அருகே பெரியார், அண்ணா ஆகியோரது சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மறைந்த தேசியத் தலைவர்களின் சிலைகளை மறைக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தற்போது பெரியார், அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கு கூண்டு அமைத்துள்ளனர். திருப்பூரில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு அடிக்கடி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். கூண்டு அமைத்திருப்பதன் மூலமாக, பொதுமக்களுக்கும் தடையாக இருக்கும். எனவே, பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்கு ஏதுவாக பழைய நிலையிலேயே, திறந்த நிலையில் பெரியார், அண்ணா சிலைகள் அமைக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

தனி வீடு

மடத்துக்குளம் வட்டம் தாசர்பட்டி, உலகப்ப கவுண்டன்புதூர் ஊர் பொதுமக்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் 30 குடும்பத்தினர் வசிக்கின்றனர். போதிய இட வசதியின்றி கடந்த 15 ஆண்டுகளாக ஒரே வீட்டில் 3 அல்லது 4 குடும்பங்கள் சேர்ந்து வாழ்கிறோம். தற்போது குடியிருக்க மிகுந்த சிரமமான சூழலை சந்தித்துள்ளோம். எங்களுக்கு குடியிருக்க தனித்தனி வீடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்