தீயணைப்புத் துறையில் காலி பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும் டிஜிபி சி.சைலேந்திரபாபு தகவல்

By செய்திப்பிரிவு

தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும் என்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநரும், டிஜிபி-யுமான சி.சைலேந்திரபாபு தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை தீயணைப்பு நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் தீ விபத்தில் சிக்கிய 2,200 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டதுடன், ரூ.279 கோடி மதிப்பிலான பொருட்களைப் பாதுகாத்துள்ளனர். பெரம்பலூரில் கிணற்றில் விழுந்தவர்களை காப்பாற்றியபோது ஒரு வீரரும், மதுரையில் நேரிட்ட தீ விபத்தின்போது இரு வீரர்களும் உயிரிழந்துள்ளனர். மெரினா கடற்கரை பாதுகாப்புக்கென தனிக் குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘தீ’ என்ற செயலியை பொதுமக்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதன் மூலம் தீயணைப்பு வீரர்களின் உதவியை உடனடியாகப் பெறமுடியும்.

நீலகிரி போன்ற பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும்போது மீட்புப் பணிகளில் ஈடுபடுவது, மரங்களை துரிதமாக வெட்டுவது ஆகியவை தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன், தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்