பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 6,485 கனஅடி தண்ணீர் நேற்று காலையில் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டிருந்தது. தற்போது ஆற்றில் வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும், பிறஇடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 10, சேர்வலாறு- 13, மணிமுத்தாறு- 15, கொடுமுடியாறு- 1, அம்பாசமுத்திரம்- 20, சேரன்மகாதேவி- 12, நாங்குநேரி- 4, ராதாபுரம்- 2, பாளையங்கோட்டை- 5, திருநெல்வேலி- 2.20.
143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் நேற்று காலையில் 142.05 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 4,325.57 கனஅடி தண்ணீர் வந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 117.49 அடியாக இருந்தது. அணைக்கு 2,710.75 கனஅடி தண்ணீர் வந்தது. பாபநாசம் அணையிலிருந்து விநாடிக்கு 4,330.86 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 2,155.30 கன அடி என மொத்தம் 6,485 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
49 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு அணை நிரம்பியது.
இதனால் அணைக்கு வரும் 554 கனஅடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்பட்டுள்ளது. இதுபோல் 22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணையும் நிரம்பியதையடுத்து அணைக்குவரும் 101 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
52.50 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணையில் நீர்மட்டம் 39 அடியாக இருந்தது. அணைக்கு 69 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 60 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நேற்று குறைக்கப்பட்டதையடுத்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்து வருகிறது.
திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில் மண்டபம் வெளியே தெரியும் அளவுக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதுபோல் மேலப்பாளையம்- டவுன் வழித்தடத்தில் ஆற்றின் குறுக்கேயுள்ள கருப்பந்துறை பாலத்தில் கடந்த சில நாட்களாக வெள்ளம் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது வெள்ளம் குறைந்துள்ளதை அடுத்து அவ்வழியாக போக்கு வரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த 2 வாரமாக மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. தொடர் மழையால் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு ஆகிய 4 அணைகள் நிரம்பியுள்ளன. இந்த அணைகளுக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணையில் நீர்மட்டம் 92.50 அடியாக இருந்தது.
நேற்று முன்தினம் இரவு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. கடனாநதி அணை, ராமநதி அணையில் தலா 5 மி.மீ., செங்கோட்டையில் 3 மி.மீ., குண்டாறு அணை, சிவகிரியில் தலா 2 மி.மீ. மழை பதிவானது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான வெயிலடித்தது.
நெல்லையில் ஜனவரியில் 2,783 மி.மீ. மழை
திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதம் இதுவரை 2,783 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் முக்கிய அணைகள் மற்றும் இடங்களில் கடந்த 1-ம் தேதி முதல் நேற்று காலை வரையில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 444.50, சேரன்மகாதேவி- 295.80, மணிமுத்தாறு- 635.40, நாங்குநேரி- 157, பாளையங்கோட்டை- 208, பாபநாசம்- 715, ராதாபுரம்- 157.60, திருநெல்வேலி- 170 என மொத்தம் 2,783.30 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 50.40 மி.மீ., 2019-ல் இதே காலத்தில் வெறும் 3 மி.மீ. மழை மட்டுமே பெய்திருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago