ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பசுமை உரக் குடிலால் சுற்றுச்சூழல் சீர்கேடு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் புகார்

By செய்திப்பிரிவு

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை உரக் குடிலில் பராமரிப்பின்மையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதிபொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆவடி மாநகராட்சியில் தினமும் 106 டன் அளவு குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்தத் திடக்கழிவுகளை கையாள்வதில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு சிரமம் ஏற்பட்டதையடுத்து, மக்கும் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்க பசுமை உரக் குடில்கள் அமைக்க உரிய நிதி வழங்குமாறு நகராட்சி நிர்வாக ஆணையர் மூலம் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்நிறுவனம் தனது சமூக பொறுப்பு நிதியில் இருந்து, ஆவடி மாநகராட்சியில் 17 இடங்களில் பசுமை உரக் குடில்கள் அமைக்க ரூ.6.05 கோடி நிதி வழங்கியது.

3 வார்டுகளுக்கு ஒரு பசுமை உரக் குடில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் மட்டும் ஒரே வார்டில் 2 உரக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த உரக் குடில்களை அமைக்கமாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடமும் (சிஎம்டிஏ) முன் அனுமதி பெறவில்லை என்பது, தரணி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக இந்த உரக் குடிலில் குப்பைகள் முறையாக மறுசுழற்சிசெய்யப்படாததால் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன.

இதுகுறித்து, ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

3 வார்டுகளுக்கு ஒரு பசுமை உரக்குடில் அமைக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டது. ஆனால், எங்கள் பகுதியில் ஒரே இடத்தில்2 உரக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படாததால் மலைபோல் குப்பை குவிந்துள்ளது. இதனால், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மேலும், பக்கத்து வார்டுகளில் சேரும் குப்பைகளும் இங்குகொண்டு வந்து சேகரிக்கப்படுகிறது. எனவே, இப்பகுதியில் உள்ள ஒரு பசுமை உரக் குடிலை அகற்ற வேண்டும்.

மற்றொரு குடிலையும் முழுமையாக பராமரிக்க வேண்டும். அப்போதுதான், தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்