விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் முதல் கட்டமாக கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டமாக கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி மருந்து 9,720 வரப்பெற்றுள்ளது. அதில் விருதுநகர் அரசு மருத்துவமனை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, திருச்சுழி அருகே உள்ள எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மையங்களுக்கு 3,320 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், சிவகாசி அரசு மருத்துவமனை, குன்னூர் ஆரம்ப சுகாதார நிலையம், எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ராஜபாளையம் மகப்பேறு அரசு மருத்துவமனை ஆகிய மையங்களுக்கு 6,420 தடுப்பூசி மருந்துகளும் என மொத்தம் 7 மையங்களுக்கும் 9,720 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மையத்திலும் ஒரு நாளைக்கு 100 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல்கட்டமாக சுயவிருப்பம் தெரிவித்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலர் அன்புவேல் முதல் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து, மயக்கவியல் மருத்துவர் முருகேசன் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். முன்னதாக தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் பார்வையிட்டார்.
தடுப்பூசி போடும் மையங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பதிவறை, காத்திருப்பு அறை, பயனாளிகள் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்தும் அறை, தடுப்பூசி போடும் அறை என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. தடுப்பூசி போட்ட பிறகு அந்த நபரை 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் 30 நிமிடங்கள் கண்காணித்தனர்.
சிவகங்கை
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை சார்பில் கரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். நாகராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.முதலில் மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் அமைச்சர் பேசுகையில், முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்களுக்கும், அதைத்தொடர்ந்து கரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.
சிவகங்கை மாவட்டத்தில் முதல் கட்டமாக 10,700 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கூறினார்.
மருத்துவ இணை இயக்குநா் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநா்கள் யசோதாமணி, யோகவதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ராஜா, ஒன்றியக் குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தா் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தில் முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago