வள்ளியூர் அருகே பொங்கலையொட்டி இளவட்டக்கல், உரல்களை தூக்கி சாகசம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வடலிவிளை கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் சாகசப் போட்டியில் ஆண்கள் இளவட்டக்கல் தூக்கியும், பெண்கள் உரலை தூக்கியும் சாகசம் செய்தனர்.

வடலிவிளை கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் சாகசப் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு இப்போட்டிகளை ராதாபுரம் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை தொடங்கி வைத்தார்.

ஆண்களுக்கான இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் 90 கிலோ, 114 கிலோ மற்றும் 129 கிலோ இளவட்டக்கல்லை தூக்கி தலையைச்சுற்றி வீச வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.

90 கிலோ இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் முத்துபாண்டி என்பவர் இளவட்டக்கல்லை தூக்கி 12 முறை தலையைச்சுற்றி வீசி முதலிடத்தையும், குலசேகரபெருமாள் 5 முறை தலையைச்சுற்றி வீசி 2-ம் இடத்தையும் பெற்றனர்.

114 கிலோ இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் தங்கராஜ் முதலிடமும், அஜய் 2-ம் இடமும் பெற்றனர். 129 கிலோ இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் தங்கராஜ் முதலிடம் பெற்றார். அவருக்கு ஐ.எஸ்.இன்பதுரை ரூ.5 ஆயிரம் பரிசளித்தார். வெங்கடேசுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து பெண்களுக்கான இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் பத்மபிரியா மற்றும் ராஜகுமாரி ஆகியோர் முதலிடம் பெற்றனர். இவர்கள் இருவருக்கும் எம்எல்ஏ தலா ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கினார். போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் தலா ரூ.ஆயிரம் பரிசளித்தார். தங்கம் இரண்டாம் இடமும் செல்வி ஆறுதல் பரிசும் பெற்றனர்.

பெண்களுக்கான உரல் தூக்கும் போட்டியில் பத்மபிரியா முதலிடமும் ராஜகுமாரி 2- ம் இடமும் பெற்றனர். இளம் பெண்களுக்கான உரல் தூக்கி வீசும் போட்டியில் சிந்து 5 முறை உரலை தூக்கி வீசி முதலிடமும், சோபியா, சிவப்பிரியா ஆகியோர் 2 முறை உரலை தூக்கிவீசி 2-ம் இடமும், சபிதா, தினிசா, ஜெபாஜென்சி, பிரியா, வினோபா ஆகியோர் ஆறுதல் பரிசும் பெற்றனர். போட்டி ஏற்பாடுகளை வடலிவிளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்