திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று (ஜன.16) நடக்கிறது.
திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உடுமலை அரசு மருத்துவமனை, தாராபுரம் அரசு மருத்துவமனை மற்றும் பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களில் இன்று கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு மையத்துக்கு 100 பேர் வீதம், மொத்தம் 400 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
உடுமலை அரசு மருத்துவமனையில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார், தாராபுரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரத் துறையின் மருத்துவர் ஜெயப்பிரியா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என கரோனா தடுப்பு பணியில்ஈடுபடும் முன்களப் பணியாளர் களுக்கு இன்று தடுப்பூசி போடப்படுகிறது. அதன்பின்னர் படிப்படியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 13,500 டோஸ் மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்ச்சியை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டனர். இந்த தடுப்பூசி சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குள் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. சுகாதாரத் துறையை சேர்ந்த 5,732 மருத்துவர்கள், செவிலியர்கள், களப் பணியாளர்களின் விவரங்கள் கோவின் இணையதளத்தில் பதியப்பட்டுள்ளன. இதற்காக 823 மையங்கள் தேர்வு செய்யப்படவுள்ளன. இதில், 1,232 தடுப்பூசி வழங்கும் பணியாளர்கள் பட்டியலிடப்பட்டு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. கரோனா தடுப்பு மருந்தை பாதுகாப்பாக வைக்க, 44 இடங்களில் குளிர்பதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 5,400 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.உதகை, குன்னூர் அரசு மருத்துவமனைகள் மற்றும் கேத்தி ஆரம்ப சுகாதார நிலையம் என மூன்று இடங்களில் தடுப்பூசி போடும் பணி இன்று நடக்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago