மதிமுக மற்றும் தீலிபன் மன்றம் சார்பில், அனைத்து மதத்தினரும் பங்கேற்ற 24-ம் ஆண்டு சமத்துவப்பொங்கல் விழா திருப்பூர் சாமுண்டிபுரத்தில் நடந்தது. கட்சியின் மாநில அவைத் தலைவர் சு.துரைசாமி தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன், மாவட்டச் செயலாளர் சிவபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தார். அனைத்து மதத்தையும் சார்ந்த 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி, பானைகளில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர். கும்மியடித்து பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.
திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் நடைபெற்ற விழாவில், பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் போலீஸார் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனர். திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில், ‘நம்ம ஊர் தாமரை பொங்கல் விழா’ செல்லப்பபுரத்தில் நடந்தது. வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல் தொடங்கி வைத்தார்.
திருப்பூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு மாநகர் மாவட்டத் தலைவர் எஸ். ரவிக்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் மோகன் கார்த்திக், மாநில செயலாளர் சேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து தரப்பினருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாத் துறை சார்பில் ‘பொங்கல் சுற்றுலா விழா’ நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பொங்கல்வைத்து விழாவைத் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “விடுமுறை நாட்களில் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் அணிவது குறித்தும், சமூக இடைவெளி கடைப்பிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. முகக்கசவம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, கரோனா நோய் தடுப்பு வழிமுறைகள் தொடர்பாக உணவக உரிமையாளர்கள்,தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து, தோட்டக்கலைத் துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், தப்பாட்டம், கரகம், கிராமிய கலை நிகழ்ச்சிகள், கோத்தர் பழங்குடியினரின் நடனம், படுகர் இனத்தவரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணிய சாம்ராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago