காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் பொங்கல் விழா

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் பொதுமக்கள் புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியனை வழிபட்டனர். இதேபோல் நேற்று இம்மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் மாடுகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று மாட்டுப் பொங்கலைக் கொண்டாடினர்.

கேளம்பாக்கம் பேருந்து நிலை2wயம் அருகே அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அச்சங்கத் தலைவர் அமிர்தசேகர் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கப் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார்.

விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றோருக்கு விக்கிரமராஜா பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வணிகர் சங்கப் பேரமைப்பின் தென்சென்னை மாவட்ட தலைவர் மோகன், கேளம்பாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர். திருக்கழுக்குன்றத்தில் புதுவெள்ளாளத் தெருவில் கிராம மக்கள் சார்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. திருக்காலிமேடு பகுதியில் இளைஞர்கள் சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவிலும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத் துறை சார்பில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் ஏதேனும் ஒரு கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படும். தற்போது, கரோனா அச்சத்தால் தமிழ்நாடு விடுதி வளாகத்தில் எளிய முறையில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுடன் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் செங்கை ஆட்சியர் ஜான் லூயிஸ் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, கனரக வாகனத் தொழிற்சாலை சாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று முன்தினம் கிறிஸ்தவ மக்கள் தமிழர் பண்பாடான வேஷ்டி, சேலை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்தப் பொங்கல் விழாவில் பெண்கள் `வயலும் வாழ்வும்’ என்ற தலைப்பில் ரங்கோலி கோலமிட்டிருந்தனர்.

150 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த பொங்கல் விழா குறித்து தேவாலய பாதிரியார் ரேமண்ட் பீட்டர் மற்றும் கிறிஸ்தவ மக்கள் தெரிவிக்கும்போது, ``இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை தான் வாழ வேண்டும் என இயேசு கூறியுள்ளார். அந்த அடிப்படையில் உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தேவாலயத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்