மானாமதுரை, காளையார்கோவி லில் பல ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி மாதம் சராசரியாக 32.3 மி.மீ. மழை பெய்யும். ஆனால் இந்தாண்டு மாதத்தின் பாதியிலேயே 117.45 மி.மீ. பெய்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் கண்மாய்கள் நிரம்பி விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகின்றன. சில இடங்களில் நெற்கதிர்கள் முளைவிடத் தொடங்கியுள்ளன.
இதையடுத்து காளையார் கோவில் வட்டாரத்தில் அல்லூர், பனங்காடி, விட்டனேரி, மறவமங் கலம், காஞ்சிரம், சாக்கூர், ஏரி வயல் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி பார்வையிடச் சென்றார்.
அப்போது வேட்டி கட்டியிருந்த அவர், அதை மடித்து கட்டி விளை நிலங்களுக்குள் இறங்கி ஆய்வு செய்தார். மேலும் அவர் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும்,’ என்றார்.
அப்போது வேளாண் இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன், துணை இயக்குநர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதேபோல், மானாமதுரை அருகே அரிமண்டபம், சோமத்தூர், சன்னதிபுதுக்குளம், படக்குளம், இலந்தைகுளம் மற்றும் திருப்பு வனம், இளையான்குடி பகுதிகளில் நாகராஜன் எம்எல்ஏ வேட்டியை மடித்துக் கட்டி மழை நீர் சூழ்ந்த விளைநிலங்களில் இறங்கிப் பார்த்தார். மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago