தடுப்புகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிருஷ்ணகிரி அருகே பொதுமக்கள் மறியல்

By செய்திப்பிரிவு

காட்டிநாயனப்பள்ளியில் எருதுவிடும் விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளி கிராமத்தில் நேற்று எருதுவிடும் விழாவுக்காக தடுப்புகள் கட்டியிருந்தனர். இன்னொரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர், தடுப்புகளை உடைத்து கழற்றி வீசினர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் உள்ள இந்திரா காந்தி சிலை எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த ஏடிஎஸ்பி ராஜு, டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகிரி பாஸ்கர், மகாராஜகடை கணேஷ்குமார், கிருஷ்ணகிரி தாலுகா சுரேஷ்குமார் மற்றும் போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ‘‘சில இளைஞர்கள் தெருவில் நின்று கொண்டு தொல்லை கொடுப்பதால் பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. தற்போது விழாவுக்காக கட்டப்பட்டு இருந்த தடுப்புகளை அகற்றி உள்ளனர். நாங்கள் எருதுவிடும் விழா நடத்த அனுமதியும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும். தொடர்ந்து பிரச்சினை செய்து வரும் எதிர் தரப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்